Bione
திருக்கோணேஸ்வரர் நடனாலயம் – சுவிஸ்

ஆசிரியர் திருமதி மதிவதனி சுதாகரன்

About

முனைவர், ஆசிரியர் திருமதி மதிவதனி சுதாகரன்

30 வருடங்களுக்கு மேலாக ஐரோப்பாவில், தமிழர்களின் பரதக்கலையின் வளர்ச்சிக்கு வித்திட்டவரும், சுவிஸ்லாந்தில் திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தின் ஸ்தாபகரும், திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தின் (Zurich) இயக்குனராகவும், சுவிஸ்லாந்தின் முது நிலை நடன ஆசிரியராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகின்றார்.

இலங்கைத் தீவின் மூன்று மலைகள் சூழ்ந்த திரிகோணம் என பெயர் பெற்ற இயற்கை எழில் மிக்க கடல் சூழ்ந்த துறைமுகமும், உயர்ந்த குன்றத்தின் உச்சியில் கோணேஸ்வர பெருமானும் மாதுமை அம்பாள்சமேத, பாபநாசம் தீர்த்தச் சிறப்பும், கன்னியா ஊற்றும், இராவணன் வெட்டு என வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலையில் திரு திருமதி சோதிநாதன் இரத்தினதேவி தம்பதியினருக்கு சிரேஸ்ட புத்திரியாக மதிவதனி பிறந்தார்.

கலையார்வம் கொண்ட பெற்றோர்கள் தந்தையின் சகோதரி கலாரத்ன, கலாபூசனம் திருமதி இராஜேஸ்வரி தெட்சினாமூர்த்தி அவர்களிடம் கர்நாடக சங்கீதம் வீணை ஆகிய கலைகளை குரு குல போதனை பெற வைத்தனர்.

இவர் தனது மூன்று வயதிலேயே தனது மழலை மாலை நேரங்களில் திரு/ புனித மரியாள் முன்பள்ளியில் தனது பிஞ்சு பாதங்களை அடியெடுத்து வைத்து தானாகவே நடனமாட தொடங்கினார்.

பரத நாட்டியத்தின் மீது மகள் கொண்ட பற்றுதலைக் கண்ட பெற்றோர்கள் 1968 ம் ஆண்டு செல்வி.கனகேஸ்வரி சங்கரப்பிள்ளை அவர்களை குருவாக ஏற்று பரதக்கலையை கற்பித்தனர் தொடர்ந்து செல்வி. கோகிலா கந்தையா அவர்களிடமும் முறைப்படி பரத நாட்டிய கலையை கற்று, நடனங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களையும் பெற்றார்.

திருமலை தெட்சன கான சபாவில் செல்வி. இராஜராஜேஸ்வரியிடம் கர்நாடக இசையை கற்று இசையும் , நடனமும் இணைந்த பாதையில் பயணித்தார்.1970ம் ஆண்டில் திருமலை விக்னேஸ்வரா நடன கலா மன்றத்தில் செல்வி. சாரதா விநாயகராஜா அவர்களிடம் பரத நாட்டியத்தினை கற்று வட இலங்கை சங்கீத சபை பரீட்சையில் சித்தியடைந்தார். கலா மன்றத்தின் ஆசிரியர் இடமாற்றத்திற்கு பின்னதாக செல்வி. சுசிலா கொரேரா அவர்களிடமும் பரதநாட்டியத்தினைக் கற்று தன்னை மேலு‌ம் மெருகேற்றிக் கொண்டார். கலைகளின் மீது கொண்ட பற்றுதலாலும், ஆசையினாலும் திருமதி பஞ்சாட்சரம் அவர்களிடத்தில் வயலின் இசையையும் கற்றுக்கொண்டார்.

மங்கை பருவமதில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் க. பொ. தர சாதாரணப்பரீட்சையில் சித்தியடைந்து உயர் தர கல்வியைத் தொடர்ந்தார். க. பொ. தர உயர் தரப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கான அனுமதியை பெற்றார். அதே சமயம் யாழ் இராமநாதன் நுண்கலைப்பீடத்தின் நடனத்துறைக்கும் தெரிவானார். தாண்டவப்பெருமான் கோணேஸ்வரர் ஆசியும், இயல்பாகவே நடனத்தின் மீது கொண்டபற்றினாலும், ஈடுபாட்டினாலும் குமாரி சோ. மதிவதனி யாழ் இராமநாதன் நுண்கலைப்பீடத்தின் நடனத்துறையை தேர்ந்தெடுத்து பட்டப்படிப்பினை தொடர்ந்தார்.

நுண்கலைப்பீடத்தில் 1983ம் ஆண்டு தொடக்கம் 1986 ம் ஆண்டு வரை

திருமதி அனுஷியா மயில்வாகனம்

திருமதி சாந்தா பொன்னுத்துரை

திருமதி லீலாம்பிகை செல்வராஜா

திருமதி பத்மரஞ்சனி உமாசங்கர்

ஆகிய கலை வித்தகர்களிடம் நடனத்தினை கற்று தனது கலைத்திறனை வளர்த்துக் கொண்டார். இக் காலப்பகுதியில் பிரத்தியேகமாக கொக்குவில் கலாபவனம் திருமதி சாந்தினி சிவனேசனிடம் பரநாட்டிய நுணுக்கங்களை கற்று தன்னை மெருகேற்றிக்கொண்டார். சம காலத்தில் யாழ் /புத்தூர் சோமஸ்கந்தா பாடசாலையில் பகுதிநேர ஆசிரியராக கடமையாற்றி தனது கற்பித்தல் செயற்திறனையும் வளர்த்துக் கொண்டார். நான்கு வருட பட்டப்படிப்பினை நிறைவு செய்து “நடன கலைமணி” பட்டம் பெற்று (Diplom in Dance) தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்தார்.

1986 ம் ஆண்டு திரு. செகநாகயம்பிள்ளை சுதாகரன் அவர்களை திருமணம் செய்து இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார்.

1988ம் ஆண்டு திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தை ஆரம்பித்து 50 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பரதநாட்டியத்தை கற்பித்தார்.1989 ம் ஆண்டு நடன ஆசிரியர் நியமனம் கிடைக்கப்பெற்று, திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் நடன ஆசிரியராகவும், வட இலங்கை சங்கீத சபை பரீட்சைக்கு நடுவராகவும் கடமையாற்றினார். ஒரு வருடத்திலேயே திரு /மரியாள் கல்லூரி மாணவர்கள் தேசிய மட்டத்திலான நடனப் போட்டிக்கு தெரிவாகி தனது கற்பித்தல் திறமைக்கான தனக்கானதொரு அடையாளத்தை உருவாக்கினார். இலங்கையில் நடைபெற்ற உள் நாட்டு போர் காரணமாக 1990 ம் ஆண்டு இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து தமிழ்நாட்டில் பத்மஸ்ரீ அடையார் K. லட்சுமணன் அவர்களிடம் பரதநாட்டிய நுணுக்கங்களை கற்று தன்னை மெருகேற்றிக்கொண்டு 1992ம் ஆண்டு சுவிஸ்லாந்து நாட்டிற்கு புலம்பெயர்ந்தார்.

நடனாலய புகைப்பட தொகுப்பு

திருமதி மதிவதனி சுதாகரன் அவர்கள் 24.10.1992 ம் ஆண்டு சுவிஸ்லாந்தில் சூரிச் மாநிலத்தில் 5 மாணவர்களுடன் திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தை ஆரம்பித்தார். ஐரோப்பாவின் குளிர் காலநிலைக்கு மத்தியிலும் பரத நாட்டியத்திற்கான தனித்துவமான கலாச்சார நடன சீருடை அணிந்து நடனத்தை கற்க வேண்டுமென்ற கருத்தினை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி அதனை அறிமுகப்படுத்தியவரும் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களே. இக் காலப்பகுதியில்! சுவிஸ்லாந்தில் புலம் பெயர் தமிழர்களின் இசைவாக்கமடையாத வாழ்வியல் சூழ்நிலை, பொருளாதார தரத்தை தக்கவைக்க வேண்டிய நிலை அதற்கான வேலைப்பழுவுடன், பிணைந்த கலாச்சாரங்களுக்குள் சிக்குண்டது தமிழ் மொழியும் தமிழர் கலாச்சாரமும்.

கலை கலாச்சாரங்கள் மீது பற்றுள்ள பெருமளவிலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பரத நாட்டியத்தினை கற்பிப்பதற்கு திருக்கோணேஸ்வரர் நடனாலயமும் குருகுல பள்ளியாக இருந்தது. தொடர்ந்த சைவசமய வழிபாடுகள், விழாக்கள், கலாச்சார நிகழ்வுகளில் இவ் நடனப்பள்ளி மாணவர்களின் நடனங்களும், சுவிட்சர்லாந்தின் இந்து சமய ஆலயங்களில் ஆசிரியையின் இசை நிகழ்வுகளினாலும் தமிழர்களின் கலை வடிவமும் அதன் பேசு பொருளும் சுவிஸ்லாந்து நாட்டு மக்களின் கவனத்தை பெற்று மூன்றாம் உலக நாடுகளின் கலையை ஐரோப்பிய மக்களும் கண்டுகளித்து அதற்கான அங்கீகாரத்தையும் கொடுத்தனர். தொடர்ந்து St.Gallen ,Aarau, Thurgau, Winterthur, Schaffhausen, Romanshorn ஆகிய இடங்களில் திருக்கோணேஸ்வரர் நடனாலயம் விஸ்த்தரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பரதம் பயிலும் கலைக் கல்விக்கூடமாக மிளிர்ந்தது.

நடனப்பள்ளி ஆரம்பித்து மூன்று வருடத்திலேயேயும், சுவிட்சர்லாந்தில் முதல்முறையாகவும் 6.5.1995 அன்று செல்வி உமா தனபாலசுப்பிரமணியம் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தினை நிகழ்த்தினார். பிற்காலப் பகுதியில் பிரித்தானியா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் தனது நடன மணிகளுக்கான பரத நாட்டிய அரங்கேற்றத்தினையும் நிகழ்திய பெருமைக்குரியவர் திருமதி மதிவதனி சுதாகரன்.

பரதநாட்டியத்தியத்துடன் வாய்பாட்டு வயலின், மிருதங்கம் ஆகிய கலை ஆசிரியர்களை ஒருங்கிணைத்து வீணை கற்பித்தலை திருமதி. மதிவதனி சுதாகரன் அவர்கள் 1995 ம் ஆண்டு ஆரம்பித்தார்.

1996 ம் ஆண்டு இந்து மாமன்றத்துடன் இணந்து ஐரோப்பிய மட்டத்தில் பரத நாட்டிய போட்டிகளை ஆரம்பித்தார்.

1997 ம் ஆண்டு ஐரோப்பிய தமிழ் நுண்கலைப்பீட நிறுவனத்தை உருவாக்கி 7 பிரிவுகள் உள்ளடக்கிய பாடத்திட்டத்துடன் பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் வீணை ஆகிய கலைகளுக்கான பரீட்சைகளை சுவிஸ்லாந்தில் முதன் முதலாக ஆரம்பித்து வைத்தார்.

1998 ம் ஆண்டு சுவிஸ்லாந்தில் நடைபெற்ற நாட்டிய மயில் போட்டி நிகழ்வில் Zurich திருக்கோணேஸ்வரர் நடனாலய மாணவி செல்வி டயானி நாகேந்திரம் “நாட்டிய மயில்” லாக தெரிவு செய்யப்பட்டு அதற்கான விருதினையும் பெற்று சுவிஸ்லாந்தின் முதலாவது “நாட்டிய மயிலின்” ஆசிரியர் என்ற கெளரவத்தையும் பெற்றார்.

2009 ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளம் கலை (நடனம்) முதலாவது தரத்தில் பட்டப்படிப்பினையும், 2011ம் ஆண்டு முதுகலைமானி (நுண்கலை) பட்டப்படிப்பினையும் நிறைவு செய்தார்.

2011 ம் ஆண்டு வட இலங்கை சங்கீத சபையின் ஐரோப்பிய நுண்கலைப் பரீட்சை இணைப்பாளராகவும், 2011 ம் ஆண்டு தொடக்கம் 2014 ம் ஆண்டு வரை அண்ணாமலை பல்கலைக்கழகம் தஞ்சாவூர், இந்தியா ஐரோப்பிய நுண்கலைப்பீட பரீட்சை இணைப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

2015 ம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டயத்திற்கான ஆய்வு தலைப்பு “நடன நோக்கில் தில்லானா” பட்டப்படிப்பினை ஆரம்பித்தார்.

2016ம் ஆண்டு சுவிஸ்லாந்தில் நடைபெற்ற வட இலங்கை சங்கீத சபையின் கலாவித்தகர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்று 40 மாணவர்களுக்கான பட்டயங்களையும் வழங்கி வைத்தார்.

2017 ம் ஆண்டு சுவிஸ்லாந்திற்கான இந்தியாவின் தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புக்களுக்கான இணைப்பாளராகவும் பொறுப்பேற்றார்.

2018ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான “நாட்டிய தாரகை” போட்டி நிகழ்வில் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களின் மாணவி செல்வி. மிதுஜா அமிர்தலிங்கம் அவர்கள் நாட்டிய தாரகை விருதினை தனதாக்கி சுவிஸ்லாந்து வாழ் தமிழ் மக்களுக்குமான பெருமையினை பெற்று தந்த பெருமைக்குரியவரும் மதிவதனியே. சுவிஸ்லாந்தின் நாட்டிய மயில்களாக……

1998ம் ஆண்டு செல்வி டயானி நாகேந்திரம்,

1999 ம் ஆண்டு செல்வி தர்சிகா தர்மேந்திரன்,

2000ம் ஆண்டு செல்வி தமாதர்சிகா நகுலேஸ்வரன்,

2001 ம் ஆண்டு செல்வி சுதர்சினி நாகலிங்கம்,

2013 ம் ஆண்டு செல்வி. சுகன்யா சிவம்,

2023 ம் ஆண்டு செல்வி ரஷ்மியா நவநேசன்,

இதுவரை அதிகளவிலான மயில்களை உருவாக்கியதும், முப்பதுக்கும் மேற்பட்ட பரத நாட்டிய அரங்கேற்றங்களை நிகழ்திய புகழ், இறைவனையும், பெருமை மதிவதனி சுதாகரன் அவர்களையும் சாரும்.

நடனாலய புகைப்பட தொகுப்பு

2015 ம் ஆண்டு முனைவர் பட்டப்படிப்பிற்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பகுப்பாய்வின் நெறியாளராக திருமதி மாதவி நடராஜன் அவர்களும். ஆய்வுக்கான தேடல்களுக்கு (சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்) சிரேஷ்ட விரிவுரையாளர் இசைத்துறை கலாநிதி தெட்சினாமூர்த்தி பிரதீபன், மற்றும் மிருதங்க வித்துவான் திரு.G.R.செந்தில்குமார் (தஞ்சாவூர்), முனைவர் திரு. நெய்வேலி ராதாகிருஸ்ணன் இருவரினதும் பங்களிப்பும் துணையாக இருந்தது. பட்டத்திற்கான தேர்வாளராக அழகப்பா பல்கலைக் கழக நுண்கலைத்துறை இயக்குனர் எம். சரளா கடமையாற்றியிருந்தார்.

உயர் கல்வி அமைச்சு அன்பில் மகேஷ், பொய்யாமொழி தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலையில், தமிழ் நாடு ஆளுனர் மாண்பை ஆரன் ரவி அவர்களிடம் 24.4.2023 அன்று “முனைவர்” பட்டத்தை பெற்றுக் கொண்டார். செல்வி சோதிநாதன் மதிவதனி யாக 1968 ம் ஆண்டு ஆரம்பித்த கலைப்பயணத்தில் கடந்து வந்த பாதைகளில் பட்ட வலிகள், சோதனைகள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் தாண்டி “முனைவர்” திருமதி மதிவதனி சுதாகரனாக ஐரோப்பாவின் முன்னணி நடன ஆசிரியர்களுள் ஒருவராக திகழ்வதற்கு பின்னணியில் திரு சுதாகரன் அவர்கள் இலைமறை காயாக இருந்ததும், இருப்பதும் மறைக்க முடியாதது.

முனைவர் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்கள் பெற்றுக் கொண்ட விருதுகளும், கெளரவ பட்டங்களும்.

1986 ம் ஆண்டு “நடன கலைமணி” யாழ் /இராமநாதன் நுண்கலைப்பீடம்.

1994ம் ஆண்டு “சிறந்த நடனஆசிரியர்” கரோலின் இசைக்குழு, சுவிஸ்லாந்து.

1997 ம் ஆண்டு “நாட்டியகலா வித்தகி” புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம், சுவிஸ்லாந்து.

1998 ம் ஆண்டு “நாட்டிய கலாசூரி” கிருஸ்ணபக்திகழகம் Luzern, சுவிஸ்லாந்து.

998 ம் ஆண்டு “சகலகலா வித்தகி” இலண்டன் நாட்டியாலயா அதிபர் திருமதி இராகினி இராஜகோபால், பிரித்தானியா.

2003 ம் ஆண்டு ” ஐரோப்பாவின் சிறந்த கலைச்சேவை ஆசிரியை” ஜெயாஞ்சலி நடனாலயம், இலங்கை.

2007 ம் ஆண்டு” நடன கலைச்செம்மல்” அனைத்துலக தமிழ்க் கலை ஆய்வு மன்றம் தஞ்சாவூர், இந்தியா.

2011 ம் ஆண்டு “ஆடல் அரசி” திருமதி லீலாம்பிகை செல்வராஜா ஜேர்மனி.

2011 ம் ஆண்டு ” சுவிஸ்லாந்தின் சிறந்த கலைச்சேவை ஆசிரியர்” பாராட்டு பட்டயம். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், ஐரோப்பிய ஒன்றியம்.

2012 ம் ஆண்டு இலங்கை கிழக்கு பல்கலைக்கழக மாணவியினால் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப் பட்டு இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றில் இவரது பெயர் பதிவாகியுள்ளது.

2013 ம் ஆண்டு “நிறைகலை” எழுத்தாளர் திரு கல்லாறு சதீஸ், சுவிஸ்லாந்து.

2013 ம் ஆண்டு ” சாதனையாளர்” சிறப்பு விருது. சுவிஸ் தமிழ் கலை மன்றம், சுவிஸ்லாந்து.

2017 ம் ஆண்டு “கலைப்பணிக்கான பாராட்டு பட்டயம்” தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா.