மனித வரலாற்றிலே கலைகள் ஒரு முக்கியமான இடத்தினை வகித்து வந்துள்ளன. கலையறிவு மக்களுக்கு மனித பண்பினை வளர்க்க உதவுவன. தமிழர்களின் இலக்கியங்களில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் “ஆயகலைகளை அறுபத்து நான்கு” என கூறியுள்ளார். இக் கலைகளுள் இசையும், நடனமும் குறிப்பிடற்பாலன.
தமிழர்களுக்குரிய சாஸ்திரீய நடனமாகிய பரதநாட்டியம் நீண்டகால வரலாறு கொண்டது. அதனுடைய அமைப்பும் பெயர்களும் காலம்தோறும் மாற்றமடைந்துவந்துள்ளன. சங்க காலத்தில் கூத்து ஆடல் போன்ற சொற்களாலும், ஆடுமிடம் ஆடுகளம் எனவும் அழைக்கப்பட்டது. சிலப்பதிகாரம் குறிப்பாக அதிலுள்ள அரங்கேற்றுகாதையிலே சித்தரிக்கப்படும்மாதவி ஆடிய ஆடல்கள் மிக்கவளர்ச்சியடைந்த செந்நெறிக் கலைக்குரிய தன்மை கொண்டவை,அரங்கேற்றத்தில் இடம்பெற்றவை அவற்றின் பொருள் சமயத்தொடர்புடையவை.
அவையாவன முருகன் ஆடிய குடைக்கூத்து, துடி, சிவபிரான்ஆடிய கொடுகொட்டி, பாண்டுரங்கம், கண்ணன் ஆடிய அல்லியம், மல், குடக்கூத்து, கொற்றவை ஆடிய மரக்கால், இந்திராணிஆடிய கடையம்,காமன் ஆடிய பேடு,திருமகள்ஆடிய பாவை என்பனவாம். எனவே நடனம் சமயசார்புள்ளதாகவும் நிலவிவந்துள்ளமை கவனித்தற்பாலது, அதே வேளை அரசசபை வெளியரங்கு முதலியவற்றில் ஆடப்பட்டு சமயசார்பற்றதாகவும் நிலவி வந்துள்ளது.
பரதநாட்டியத்தின் இன்றியமையாத அம்சங்களான பாவம், ராகம், தாளம் ஆகியவற்றையே பரதம் எனும் பதத்திலுள்ள மூன்று எழுத்துக்களும்(பரத) குறிப்பன என ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால் இந்தியாவில் உள்ள ஏனைய சாஸ்திரீய நடனங்களிலும், வேறிடங்களிலுள்ள சில நடனங்களிலும், இவ் அம்சங்கள் காணப்படுவதால், இவ் விளக்கத்கினைஒரு சாரார் ஏற்க தயங்குகின்றனர்.
இந்தியாவின் பெயரான பாரத (பரத) அல்லது பரத என்னும் இனக் குழுவின் பெயராலும் இது வழக்கிலேற்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. குறிப்பாக சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இதன் மறுமலர்ச்சிக்குஅயராது செயலாற்றியஇ. கிருஷ்ணஐயர் வரலாற்று நோக்கில் ஆராய்ந்து சதிர் என அழைக்கப்பட்டு வந்த நடனத்தினைப் பரதநாட்டியம் என அழைத்து இப் பெயர் பரவலாகவழங்க வழிகோலினார் என கூறப்படுகிறது. இம் முயற்சிக்கு ஸ்ரீமதி ருக்மிணிதேவி அருண்டேல் போன்றோர் பேராதரவும், ஊக்கமும் அளித்தனர். ஆனால் பரதம், பரதநாட்டியம் எனும் பதங்கள் தமிழிலக்கியம், கல்வெட்டு போன்றவற்றில் இதற்கு முன்பே வழக்கிலிருந்து வந்துள்ளன.எடுத்துக்காட்டுக்களாகக் குமரகுருபரரின் “சகலகலாவல்லி மாலையில்” “பண்ணும் பரதமும்” என்னும் பதங்கள் ஒன்று சேர்ந்து வந்துள்ளமை உற்றுநோக்கற்பாலது . அதாவது ஆடலிலின் பெயரும்(பரதம்), அதற்குரிய இசையின்(பண்) பெயரும் ஒன்று சேர்த்துக் கூறப்பட்டுள்ளன. கி. பி 15-16 ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கர்நாடக இசையின் பிதாமகரான புரந்தரதாசரின் கீர்தனை ஒன்றிலே பரதநாட்டிய என்ற பதமே வந்துள்ளது. கி. பி 13ம் நூற்றாண்டிலே சோழநாட்டிலே ஆட்சி செய்த கோப்பெருஞ்சிங்கனின் விருதுப் பெயர்களிலே “பரத” எனும் பதம் வந்துள்ளது. ஏறக்குறைய இதே காலகட்டத்தினை சேர்ந்த சைவசித்தாந்த நூல்களில் ஒன்றான உண்மை விளக்கம் (36) சிவபிரானின் திருநடனத்தினைப் “பரதம்” எனக் குறிப்பட்டிருப்பது நன்கு கவனித்தற்பாலது.
தமிழகத்திலே சங்ககாலம் தொட்டு பல காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு மெருகூட்டப்பெற்று நிலவி வந்துள்ளது எனலாம். சங்க காலத்திலும் அதனை அடுத்துள்ள காலப்பகுதியிலும் இது கூத்து, ஆடல் எனவும், பின்னர் நடனம்,தேவரடியார் ஆடல்/ஆட்டம்/ நடனம்/பரதம்/, பரதநாட்டியம் /தேவதாசி/தாசிஆட்டம்/சின்னமேளம் குறிப்பாகச் சதிர்என பலவாறு அழைக்கப்பட்டு வந்துள்ளது. பிற்காலத்திலே குறிப்பாக 20 ம் நூற்றாண்டிலேற்பட்ட மறுமலர்ச்சிக்கு முன் இது சீர் கெட்டு கீழ்நிலையடைந்திருந்த படியால், இதன் சிறப்புக்களை பலர் அறிந்திலர் இதனை எள்ளிநகையாடினர். ஆனால் மறுமலர்ச்சியின் பின் நிலைமை நன்குமாறிவிட்டது. மீண்டும் பரதநாட்டியம் என அழைக்கப்படுகின்றது. இக்கலையின் வரலாற்றினை முழுமையாக நோக்கினால், இது காலம் தோறும் சுழ்நிலைக்கேற்ப வளர்சியுற்று வந்துள்ளமை கவனிதற்குரியது. எனவே, இக்கால சுழ்நிலைக்கேற்ப பழைய மரபுகளின் அடிப்படையிலே ஆக்க பூர்வமான புதிய வளர்ச்சிகளும் புரிதல்களும் நன்கு ஏற்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வுக்கு பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரம் மேலைத்தேய நாடுகளில் பல்லின மக்களின் கலைகளுக்குள்ளும், கலாசாரங்களுக்குள்ளும் சிக்குண்டபோதும் இப் பரதக்கலையை சுவிஸ்லாந்தில் மேலும் ஒரு படி நிலைக்கிட்டுச்சென்ற பணியும், பெருமையும் திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தினையும் Zurich , முனைவர் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களையும் சாரும்.