மனிதனின் வாழ்வில்! இயங்கும் உடலில் நிகழும் அபிநய உடலசைவு மொழியை உலகெங்கும் உள்ள எல்லா நாட்டினரும் போற்றி வளர்க்கின்றனர். ஒவ்வொரு இனத்தவரும் நாட்டியக்கலையில் அளவற்ற உற்சாகங்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் நாட்டுப்புறக்கலைகளையும்,நிகழ்வுகளையும் மக்கள் மனதார ஏற்றுக் கொண்ட நிலையில் விலங்குகளினதும், பறவைகளினதும் அசைவுகளையும் , நடைகளையும் பார்த்த மனிதன் தானும் அதே போல் அசைந்தாட நினைத்தான். அவ்வாறே மயில் தோகையை விரித்து அழகாக அசைந்து வருவதைப் பார்த்த தமிழர்கள், தங்கள் கலைவடிவில் மயிலாடலை புகுத்தினார்கள். அதுவே பரதத்தில் “மயில் நடனம்” என உருப்பெற்றது. புலம்பெயர்த் தமிழர்கள் கலைகளின் மீதும், தமிழர் பண்பாடுகள் மீதும் கொண்டுள்ள பற்றுதல்கள்,அவரவர் தம் வாழும் நாடுகளில் அவற்றை காப்பாற்றியும் வளர் நிலைக்கிட்டும் சென்றுள்ளனர் என்பது போற்றுதலுக்குரியது.
அவ்வாறே பரதநாட்டியத்தினை கற்றதுடன் மட்டுமல்லாமல் மாணவர்கள் தங்களது நடனத் திறன் மற்றும் அரங்க ஆளுமைகளை வளர்ப்பதற்கும், ஆசிரியர்கள் தமது கற்பித்தல் திறன்களையும் தேடல்களையும் மெருகேற்றும் சிந்தனையுடன் முதன்முறையாக 1998ம் ஆண்டு சுவிஸ்லாந்து நாட்டில் தாய் மொழியையும், தமிழர் கலைகளையும் வளர்நிலைக்கிட்டுச்சென்ற சொலத்தூண் நலன்புரிச் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட போட்டி நிகழ்வே“நாட்டிய மயில்”.